நாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் நாகூர் யூசுப்பியா நகரில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் , சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் ஒரு வீட்டில் இருந்த பார்சல் பண்டல்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். இதைக்கண்ட காவல்துறையினர் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த பார்சல் பண்டல்களை பிடித்து பார்த்துள்ளனர்.
அந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நாகூர் யூசுப்பியா நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ் (27), நாகூர் வண்ணாகுளத்தை சேர்ந்த குமார் (41) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது இத்ரீஸ், குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.