சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியதாக கணவன்-மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு 3 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் உக்கரம் பெரியார் நகரைச் சேர்ந்த தங்கவேல், அவருடைய மனைவி வசந்தி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 150 லிட்டர் ஊறலையும், 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.