கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை பகுதியில் பல்லு செந்தில் என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற சிவசுப்பிரமணியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜெகதீசன் 2008-ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி 11 ஆண்டுகளாக மலேசியாவில் தனது காதலியுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முயற்சியின் காரணமாக நன்னிலம் இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில், தனிப்படை அமைத்து ஜெகதீசனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனையடுத்து திருச்சி விமானநிலையத்திற்கு ஜெகதீசன் என்கிற சிவசுப்பிரமணியன் மலேசியாவில் இருந்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி விமான நிலைய காவல்துறையினரின் உதவியுடன் தனிப்படையினர் அங்கு சென்று மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த ஜெகதீசன் என்கிற சிவசுப்பிரமணியனை கைது செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் நன்னிலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.