சாராயம் விற்பனை செய்த தந்தை-மகன்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சாராயம் விற்பனை செய்தவர்கள் குடவாசல் அருகே உள்ள வடகண்டம் புதுத் தெருவைச் சேர்ந்த வைரக்கண்ணும் மற்றும் அவரது மகன்கள் தினகரன், திருஞானம் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வீட்டின் அருகே இருந்த 150 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடம் இருந்த சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த தந்தை- மகன்களை கைது செய்துள்ளனர்.