கஞ்சா கடத்தி வந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் இதில் தொடர்புடைய மொத்த வியாபாரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யகோரி சரக டி.ஐ.ஜி. பர்வேஷ்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், கந்தசாமி, தலைமை காவலர் இளைய ராஜா மற்றும் போலீசார் நவீன்குமார், அருள்மொழி அழகு ஆகியோர் அடங்கிய சரக தனிப்படை காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள பாடகிரி கிராமத்திலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கஞ்சா விற்பனை செய்து வரும் கும்பலை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து அங்கு இருந்து வட மாநிலத்தை சேர்ந்த 6 பேரையும், தமிழகத்தைச் சேர்ந்த அவர்களின் கூட்டாளிகள் 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ஆந்திர மாநிலம் பதிவு எண் கொண்ட 2 கார்களையும், 120 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் கைப்பற்றி, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.