சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அலிவலம் சாலையில் சந்தேகபடும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்ததால் காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தபோது 3/4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்வதற்கு திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவாரூர் அழகிரி காலனியை சேர்ந்த காசிலிங்கம், ஸ்டாலின், சுந்தரவளாகத்தை சேர்ந்த சிவசங்கர் என தெரியவந்தது. அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து 3 பேரையும் காவல்துறையினர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைச்சாலையில் அடைத்தனர். இவ்வாறு திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.