திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 1 – ஆம் தேதியன்று சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மணிகண்டன் அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி மணிகண்டனின் உறவினர் வீட்டில் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் அடுத்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.