தாய் மற்றும் மகனை காரில் கடத்தி சென்று துன்புறுத்திய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆத்திகுளம் பகுதியில் தங்க மாரியப்பன் என்ற டி.வி மெக்கானிக் வசித்து வருகிறார். இவரின் நண்பரான மொக்கையா என்பவரின் மூலம் பாண்டிச்சேரியில் வசித்து வரும் ஜெய்சங்கர் என்பவர் தங்க மாரியப்பனுக்கு அறிமுகமானார். இந்நிலையில் ஜெய்சங்கர் தான் இரிடியம் வியாபாரம் செய்வதால் அதற்கு எலக்ட்ரானிக் போர்டு வேண்டும் என்றும், அதற்குரிய ஒரு லட்சம் பணத்தையும் தங்க மாரியப்பனிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த பணத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி எலக்ட்ரானிக் போர்டு உருவாக்கும் பணியில் தங்க மாரியப்பன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை செய்து கொடுக்க முடியாததால் தன்னிடம் இருந்த 40 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு ஜெய்சங்கரிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத ஜெய்சங்கர் தங்க மாரியப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து ஜெய்சங்கர் தனது ஆதரவாளர்களுடன் காரில் தங்க மாரியப்பனின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் அங்கு இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த அவரது அம்மாவை அந்த கும்பல் கடத்திச் சென்று விட்டது. இதனை அறிந்ததும் தான் ஒரு லட்சத்தை தந்து விடுவதாகவும், எனது தாயாரை விட்டு விடுமாறு அவரிடம் கெஞ்சியுள்ளார். இதனை தொடர்ந்து ஜெய்சங்கர் தங்க மாரியப்பனை கடத்தி விட்டு அவரது தாயாரை விடுவித்துள்ளார். அப்போது மாரியப்பனின் கண்களில் கருப்பு துணியை கட்டி அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளனர்.
அதன்பின் தங்க மாரியப்பனை தாக்கி அந்த கும்பல் பல்வேறு பத்திரங்களில் அவரிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டு பணத்தை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த தங்க மாரியப்பன் ஜெய்சங்கர் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாய் மற்றும் மகன் ஆகிய இருவரையும் துன்புறுத்திய 12 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.