Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கிளாஸ் ரூம் மாதிரி இல்லை” மர்ம நபர்கள் செய்த செயல்…. பெற்றோர்களின் கோரிக்கை….!!

அரசு பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவரானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சீட்டு ஆடுவது, மது அருந்துவது என பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் நேற்று (திங்கட்கிழமை) வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். அப்போது 10-ம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் மாணவர்களின் மேஜை நடுவில் மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், தின்றது போக எஞ்சிய தின்பண்டங்கள் கிடந்தது. ஆகவே யாரோ மர்ம நபர்கள் மது அருந்துவதற்காக குறிஞ்சி பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் வளாகத்தில் இருந்து ஒரு மரத்தின் வழியாக மாடி ஏறி 10-ம் வகுப்பறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாரில் இருப்பதுபோல் மகிழ்ச்சியாக மது அருந்தி இருகின்றனர். மேலும் அவர்கள் மது அருந்தி விட்டு செல்லும்போது வகுப்பறையில் இருந்த 2 பிளாஸ்டிக் நாற்காலிகளையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் காவல்துறையினரிடம் கூறியபோது “பள்ளி வளாகத்தில் இதுபோன்று அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் எல்லை மீறி வகுப்பறையின் உள்ளே வந்து மது அருந்தி சென்று இருக்கிறார்கள். ஆகவே அவர்களை உடனடியாக பிடித்து தண்டிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள். அதுமட்டுமின்றி குறிச்சி பள்ளியில் சேதமடைந்து கிடக்கும் சுற்றுச்சுவரை உயரமாக கட்டிக்கொடுக்க வேண்டும். இதனைதொடர்ந்து பள்ளிக்கு இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும். மேலும் இரவு நேரங்களில் பள்ளிக்கூடம் அருகே வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |