கீழடி 6ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் மணலூரில் பழங்கால உலைகலன், சுடுமண் உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. அதனை தொடர்ந்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியத்துறை மேற்கொண்டது. இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது 6ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் மே 20ம் தேதி மீண்டும் பணிகள் தொடங்கிய நிலையில் அகழாய்வின் ஒரு பகுதியான மணலூரில் மே 23ம் தேதி முதன் முதலாக ஆய்வு பணிகள் தொடங்கின. 2 குழிகள் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மணலூரில் உள்ள ஒரு குழியில் உலைகலன் கண்டறியப்பட்டது.
இந்த உலை கலன் ஒன்றரை அடி விட்டத்துடன் வட்ட வடிவில் கிடைத்துள்ளது. ஒற்றை செங்கற்களால் கட்டப்பட்ட இந்த உறைகலனானது, உலோகங்களை உருக்கி ஆபரணங்கள் செய்வது உள்ளிட்ட மற்ற பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். இதேபோல மற்றொரு குழியில் சுடுமண் உலை கண்டறியப்பட்டுள்ளது. சுடுமண் உலை, உலைகலன் கிடைத்திருப்பதால் மணலூர் தொழில்நகரமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.