கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் மணலூரில் முதன் முதலாக இன்று பணிகள் தொடங்கியுள்ளது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட நிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த 5ம் கட்ட அகழாய்வில் 33 குழிகள் தோண்டப்பட்டு இரட்டை மற்றும் வட்டச் சுவர்,
கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் என 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு பிப்.19-ம் தேதி 6ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதில் மூன்றரை அடி ஆழத்தில் சுண்ணாம்பு சுவர் ஒன்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து 4 அடி ஆழத்தில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது.
இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் 54 நாட்களுக்கு பிறகு மே 20ம் தேதி மீண்டும் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் 6ம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியான மணலூரில் முதன் முதலாக இன்று ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன. 12 ஊழியர்கள், தொல்லியல் துறை உதவி அலுவலர், ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் இந்த அகழாய்வில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.