வரதட்சணைக்காக காதல் மனைவி என்றும் பாராமல் கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுனிதா(29). இவர் கார்த்திக்(34) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது கார்த்திக் 50 சவரன் நகை போட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். ஆனால் 15 சவரன் இரண்டு சக்கர வாகனம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை சுனிதாவின் பெற்றோர் வழங்கி உள்ளனர்.
இதனையடுத்து திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர் சுனிதாவிடம் திருமணத்தின் போது 15 சவரன் மட்டுமே நகை கொடுத்ததாகவும் மீதியை வீட்டிலிருந்து கொண்டு வரும்படியும் கூறி துன்புறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் கார்த்திக் சுனிதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர் கோபம் கொண்ட கார்த்திக் காதல் மனைவி என்றும் பாராமல் அரிவாளால் சுனிதாவின் தலையில் வெட்டியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த சுனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதை அடுத்து கார்த்திக்கும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு சுனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.