வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவிப்பது தொடர்பில் பரிசீலனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது.
இது பற்றி தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது, வடகொரிய நாட்டின் ஆயுதத்திட்டத்தை மேற்கொள்ள நிதி ஆதாரமாக இருக்கும் இணைய வழி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அணு ஆயுத பரிசோதனை போல ஆத்திரத்தை உண்டாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பொருளாதார தடை மற்றும் மற்ற தடைகளையும் அறிவிப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் வடகொரிய நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரிய நாட்டை எச்சரிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவிடமிருந்து எலும்பை கவ்விக்கொண்டு ஓடக்கூடிய காட்டு நாயை காட்டிலும் மோசமாக இருக்கும் தென் கொரியா, எங்கள் நாட்டின் மீது என்ன தடைகளை அறிவிக்கப்போகிறது என்பது ஆச்சர்யமாகவுள்ளது. என்ன ஒரு வினோத காட்சி…
எங்கள் நாட்டின் மீது அமெரிக்காவும், தென் கொரிய நாட்டின் கூலிகளும் விதிக்கும் தடைகள் மற்றும் நிர்பந்தங்கள் எங்கள் மீது இருக்கும் விரோதம் மற்றும் ஆத்திரத்திக்கு எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிறது. மேலும் அது அவர்களுக்கு கயிறாக அமையும் என முட்டாள் தனம் கொண்ட முட்டாள்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.