அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹனோய் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு விமானத்தில் சென்றபோது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு லிப்ட் கொடுக்க முன்வந்ததாக BBC கூறியுள்ளது.
அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு சவால் விட்டு வந்தது வடகொரியா. அதனால் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் அதற்கு சற்றும் சளைக்கவில்லை கிம் ஜாங் உன். இதனால் டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் உன்-ஐ 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் 2019ஆம் ஆண்டு வியட்நாம் தலைநகரிலும் நேரில் சந்தித்து அணு ஆயுத சோதனையை கை விடுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற மாநாடு முடிவடைந்த பிறகு கிம் ஜாங் உன்-ஐ வட கொரியாவிற்கு விமானத்தில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதியின் விமானமான Air Force One-ல் டிரம்ப் வியட்நாமிற்கு சென்றிருந்தார் . ஆனால் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீனா வழியாக 60 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து இந்த மாநாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார். விமானத்தில் மிக விரைவாக வியட்நாமிற்கு சென்றிருக்க முடியும். ஆனால் அவர் தனது தந்தையின் வழிமுறையை பின்பற்றுவதற்காக ரயில் மூலம் வியட்நாமிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
“Trump Takes on the World” என்ற தலைப்பில் BBC-யின் ஆவணப்படத்தில் இந்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. கிம் ஜாங் உன்-ஐ Air Force One விமானத்தில் ஏற்றி வடகொரியாவின் இறக்குவதற்கு டிரம்ப் முயற்சி செய்துள்ளார். இருப்பினும் டிரம்பின் கோரிக்கையை கிம் ஜாங் உன் ஏற்காமல் ரயிலில் செல்ல விருப்பம் உள்ளதாக டிரம்பிடம் கூறியிருக்கிறார். ஒருவேளை டிரம்பின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்த விமானத்தின் மூலம் கிம் ஜாங் உன் வட கொரியாவிற்கு செல்லும் நிலை ஏற்பட்டிருந்தால் டிரம்பின் அந்த விமானம் வடகொரிய எல்லைக்குள் பயணிக்க வேண்டியது இருக்கும். அது மட்டும் நிகழ்ந்திருந்தால் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பிருந்திருக்கும் என்றும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.