தலைமறைவாக இருந்து கிம் என்ன செய்தார் என எங்களுக்கு தெரியும் என தென்கொரியா அதிகாரி கூறியுள்ளார்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 அன்று கட்சிக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், யார் கண்ணுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் மாரடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அவர் கோமாவிற்கு சென்றதாகவும், மரணமடைந்து விட்டதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் கிம் ஜாங் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை அன்று உரத் தொழிற்சாலையை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பேசியது மற்றும் தொழிற்சாலை சுற்றி பார்ப்பது என அனைத்தும் நேரலையாக வெளியிட்டதுடன் புகைப்படங்களையும் வடகொரியா ஊடகம் வெளியிட்டது.
தற்போது தென்கொரிய உயரதிகாரி ஒருவர் சூசகமாக “கிம் ஜாங் 20 நாட்கள் என்ன செய்தார் என தங்களுக்கு தெரியும் என்று தெரிவித்ததோடு கிம் எந்த விதமான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை அவரது உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே எனவும் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதியின் உயர்மட்டக் குழுவில் பணியாற்றும் அந்த அதிகாரி வெளியிட்ட தகவலால் மேலும் மர்மங்கள் கிம் ஜாங் தொடர்பில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் Yonhap எனும் செய்தி நிறுவனம் கிம் எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை என உறுதி செய்துள்ளது. அதோடு கிம்மின் மணிக்கட்டில் இருக்கும் மர்மமான அடையாளம் குறித்த உறுதியான தகவல்களை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது.