வடகொரிய ராணுவ கூட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட அதிபரின் புகைப்படம் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதனால் சர்வதேச ஊடகங்கள் பலவும் அவர் இறந்து விட்டதாகவும், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வந்தன. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மீண்டும் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஜூலை மாதம் 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடந்த வடகொரிய ராணுவ கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பெரிய அளவில் பேண்டேஜ் ஒன்று அவரது தலையின் கீழ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அறுவை சிகிச்சை ஏதேனும் அவருக்கு நடைபெற்றதா என்பது குறித்த சர்ச்சைக்குரிய சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஆனால் வட கொரிய தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.