வடகொரியாவின் தலைவரான கிம் ஜோங் உன் அந்நாட்டு மக்கள் தென்கொரிய நாடகங்களை பார்த்தாலோ அல்லது பாப் இசையை விரும்பி கேட்டாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
வடகொரியாவில் உள்ள மக்களிடையே தென் கொரியாவின் தொலைக்காட்சி தொடர்கள், பாப் இசை மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் குறுந்தகடுகள் மற்றும் கேஸட்டுகள் மூலம் எல்லை தாண்டி வந்த தென்கொரியாவின் கலாச்சாரமானது சீனா மூலம் தற்போது அடுத்த கட்ட முயற்சியை எட்டி வருகிறது. இதனை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் புற்றுநோய்க்கு சமமானது தான் தென்கொரிய கலாச்சாரம் என்று விமர்சித்து பேசியுள்ளார்.
எனவே இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் வடகொரியாவும் கூடிய விரைவில் அழிவை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தென்கொரிய கலாச்சாரத்தை வடகொரியாவில் பின்பற்றுபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதோடு, கடுமையான தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடகொரியாவில் புதிய சட்டமானது கடந்த டிசம்பர் மாதம் அமலுக்கு வந்த நிலையில் தென்கொரிய நாடகங்கள், பாடல்கள், கலாச்சாரம் ஆகியவற்றை வடகொரியாவில் பின்பற்றுபவர்களுக்கு பதினைந்து ஆண்டுகள் தண்டனைய வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனைகளில் தற்போது சிறிய மாற்றம் கொண்டுவரப்பட்டு குறுந்தகடுகள், கேசட்டுகள் ஆகியவற்றின் வாயிலாக தென்கொரிய கலாச்சாரங்களை வடகொரியாவில் பின்பற்ற நினைப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.