கிணற்றில் குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பன்னம்பாறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மும்பை கால்கோப்பர் பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முருகேசன் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் புது வீடு கட்டி கடந்த 15-ஆம் தேதி புதுமனை புகுவிழாக்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் கருங்கடலில் உள்ள நண்பரை பார்க்க கடந்த 14-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அதன் பின் நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டிற்கு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இதுகுறித்து அவரது உறவினர்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை தேடி வந்தனர். இந்நிலையில் கண்டுகொண்டான் மாணிக்கம் செல்லும் வழியில் ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் முருகேசன் பிணமாக மிதந்து கிடந்துள்ளார்.
மேலும் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கிணற்றின் அருகில் நின்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகேசனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முருகேசனுக்கு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.