கிணற்றுக்குள் இறங்கி மேலே ஏற முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொட்டையைகாட்டூர் இட்டேரி தோட்டத்தில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சேவல் வளர்த்து வந்த நிலையில் அது அப்பகுதியில் உள்ள 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. அப்போது கிணற்றில் குறைவாக தண்ணீர் இருந்ததால் சேவல் தத்தளித்தபடி இருந்தது. இதனையடுத்து சேவலை காணவில்லை என்று கோகுல் தேடிப் பார்த்தபோது கிணற்றில் தத்தளிப்பது தெரியவந்தது. அதன்பின் சேவலை காப்பாற்றுவதற்காக கோகுல் அந்த கிணற்றிற்குள் இறங்கினார்.
இதனைதொடர்ந்து கோகுல் தனது சேவலை மீட்டு தனது கையில் வைத்துக்கொண்டு கிணற்றில் இருந்து மேலே ஏற முயற்சி செய்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் கோகுல் கிணற்றிலிருந்து மேலே ஏற முடியாமல் தவித்தால் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கோகுல் கிணற்றுக்குள் தவித்து வந்ததை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிறு கட்டி கோகுலையும், சேவலையும் பாதுகாப்பாக மீட்டனர்.