கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது
ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு பிளெஸி அதிரடி காட்டினார். ஆனால் வாட்சன் 7 ரன்னில் ஏமாற்றமளித்தார். இதையடுத்து ரெய்னாவும், டு பிளெஸியூம் ஜோடி அதிரடியாக விளையாடியது.
அதன் பிறகு ரெய்னா 38 பந்துகளில் 53 ரன்கள்(5 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.அதை தொடர்ந்து அதிரடியாக அதிரடியாக விளையாடி வந்த டு பிளெஸியும் 55 பந்துகளில் 96 ரன்கள் (10 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், மொஹம்மது சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 171 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க கே.எல் ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கினர். கேஎல் ராகுல் தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆடி அரைசதம் கடந்தார். அவருக்கு கிறிஸ் கெய்ல் கம்பேனி கொடுத்தார்.இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. அதன் பிறகு ஹர்பஜன் சிங் ஓவரில் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 36 பந்துகளில் 71 ரன்கள் (7 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்க, அதை தொடர்ந்து கிறிஸ் கெய்ல் 28 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 36 (22) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மயங் அகர்வால் 7 ரன்னில் வெளியேறினார். கடைசியில் சாம் கர்ரன் 6* (7) ரன்களும், மன் தீப் சிங் 11* (9) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்கமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 173 ரன்கள் எடுத்தது . சென்னை அணியில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.