அதிபர் ஆட்சிமுறை கலைக்கப்பட்டதற்கு ஐ.நா.வின் பொதுசெயலாளரான அண்டனியோ குட்டரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்கா நாடான கினியாவானது 1958 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து பிரிந்து விடுதலை அடைந்தது. இதனையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜனநாயக முறைப்படி முதல் பொதுத் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானார். இதனை தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். ஆனால் அவரின் ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் நேற்று காலை அதிபர் மாளிகையின் முன்பு கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பல மணி நேரமாக சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இதற்கிடையில் அரசு தொலைக்காட்சியை அந்நாட்டு ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கர்னல் மமாடி டம்போயா தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் தலைமையிலான ஆட்சியானது கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். அதிலும் அவர் கூறியதாவது “அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் கொடுக்க முடியாது. இனிமேல் மக்கள் தான் அரசினை வழி நடத்துவார்கள்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து நாட்டை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரரின் தலையாய கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஆல்பா காண்டே பதவியேற்ற பிறகு தான் அலுமினியா தாதுவை ஏற்றுமதி செய்யும் பணியானது மிக வேகமாக வளர்ச்சியடைந்தது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிற்காக ஐ. நா.வின் பொது செயலாளரான அண்டனியோ குட்டரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ” ஒரு துப்பாக்கியின் அதிகாரத்தால் அரசாங்கத்தை கைப்பற்ற நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் ஒரு பகுதி தாக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிபரின் நிலை குறித்து அமைச்சகமும் தெரிவிக்கவில்லை என்பதால் அங்கு பெருங்குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.