கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமுடையான் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று நபர்களுடன் தனது நிலத்தில் வேலை செய்துள்ளனர். அதன்பின் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குடிநீர் தேவைப்பட்டதால் வயலில் இருக்கும் கிணற்றில் ஐயப்பன் தண்ணீர் எடுத்து வருவதாக உடன் வேலை செய்பவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் ஐயப்பன் திரும்ப வராத நிலையில் சந்தேகமடைந்த சக தொழிலாளர்கள் கிணற்றுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஐயப்பன் காலில் அணிந்திருந்த செருப்பும், தண்ணீர் பிடிப்பதற்காக எடுத்து வந்த குடமும் கிணற்று நீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடிய போது ஐயப்பன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.