வழிபாதை பிரச்சனையில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் காவல்நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஈரியூர் கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் அய்யாதுரைக்கும் இடையே கிராம சாலையில் வழிபாதை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த ஜெயப்பிரகாஷின் ஆதரவாளர்களான கிராம மக்கள் காவல்நிலையம் எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.