புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி கருத்து மோதல் இருந்து வருகிறது. சில நேரங்களில் இருவரும் நேரடியாக ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கிரண்பேடி மக்களுக்கு வழங்கும் திட்டங்களை தடுக்கும் ‘பேய்’ எனக் குறிப்பிட்டு பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது நாராயணசாமியின் கருத்திற்கு கிரண் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது. பேய்கள் மக்களை பயமுறுத்தும். அரசு அதிகாரிகளின் பணியானது மக்களை பாதுகாப்பது. பேய் என்ற வார்த்தை வேண்டாத வார்த்தை. நாகரீகமற்றது, அருவருப்பானது இந்தக் கருத்தை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.