காரில் கடத்திச் செல்லப்பட்டு பெண் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் கிர்கிஸ்தான் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1991 ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்றுள்ளது. இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு வரை ஒரு ஆண் தான் பார்க்கும் ஒரு பெண்ணை விருப்பப்பட்டால் அவளை கடத்திக்கொண்டு வந்து கட்டாயப்படுத்தி ஒரு ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்பின் கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்ற பின் இந்த செயல்கள் குறைய தொடங்கியுள்ளது என்றாலும் அவ்வப்போது இதுபோன்ற செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்ற ஐஸாடா என்ற இளம்பெண் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது காரில் வந்த 3 பேர் அவரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஐஸாடா கடத்தி செல்லப்பட்ட காரின் நம்பரை கண்டுபிடித்து அதை வைத்து புதன்கிழமையன்று அந்த காரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த காரின் உள்ளே ஐஸாடா சடலமாக கிடந்துள்ளார். மேலும் கடத்திச் சென்ற மூவரில் ஒருவரும் அதே காரில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து கடத்தியவர்களில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 500 பேர் ஒன்று திரண்டு உள்துறை அமைச்சகம் முன்பாகப் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்ட கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இது குறித்து போராட்டக்காரர்களிடம் கேட்கும்போது “இந்த சம்பவத்தில் அனைத்து தகவல்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த தகவல்களை வைத்து போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் ஐஸாடாவை காப்பாற்றி இருக்கலாம்” என அவர்கள் கூறுகின்றனர்.