பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள் பாலிப்பது கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சம் ஆகும். அதனால் ஜென்மாஷ்டமி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு மாவிலை தோரணங்களால் அழகுபடுத்த வேண்டும். அதன் பின்னர் வாசலில் தொடங்கி பூஜை அறை வரை சின்ன கண்ணன் நடந்து வருவது போல அவனது பாதச்சுவடுகளை அரிசி மாவால் பதிக்கவேண்டும். கண்ணன் குழந்தைப் பருவத்தில் வெண்ணை திருடி உண்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு.
அதை நினைவுகூறும் வகையில் கிருஷ்ண ஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை, நிவேதனமாகப் படைக்க வேண்டும். வெள்ள சீடை , உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாக்கு, தேன்குழல், மனோகரன், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் வைத்து இதனுடன் படைக்கலாம். திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் மேற்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தம்பதிகள் காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும்.
கணவன் மனைவி இருவரும் தம்பதி சகிதம் ஆகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருந்து, இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண்விழித்து அவரது வரலாற்றை கேட்கவேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்ததாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமணத் தம்பதியர்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புத்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்ய மிக்க புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி புத்திர பாக்கிய யோகம் கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.