கிசான் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என அறிவித்துள்ளார்.
2.50 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கி ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் தரப்படும் என கூறியுள்ளார். கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்துவதன் மூலம் 2.50 கோடி விவசாயிகள் பலன்பெறுவார்கள். கடந்த 2 மாதத்தில் 25 லட்சம் புதிய கிசான் கிரடிட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் விவசாயக் கடன் அட்டைகளை அளித்துள்ளோம்,
அவர்களுக்கு 25 ஆயிரம் கோடி அளித்துள்ளோம், விவசாயிகளை மறந்துவிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ரூ. 30,000 கோடி அவசரகால கூடுதல் நிதி நபார்டு மூலம் வழங்கப்படும். கிராம வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த நிதி வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.