Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி – பாஜக வினர் ஆர்ப்பாட்டம்…!!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் தலைமையில் ஆட்சித் தலைவரிடம் கிசான் திட்டம் ஊழல் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டுமென மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பேரணியாகவந்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்து கைது செய்வதோடு, அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டுமென சேலம் மாவட்ட பாஜகவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் கரூரில் 2,000 போலி பயனாளிகள் முறைகேடாக பணம் பெற்று வருவதாக கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 310 போலி பயனாளிகளிடம் இருந்து 12,40,000 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டுமென கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்த பாஜகவினர், ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Categories

Tech |