இன்று நாடு தழுவிய முழு போராட்டம் நடைபெற உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால் விவசாயிகள் தொடர்ந்து 13 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 9-ஆம் தேதி நாளைக்கு நடைபெற உள்ள நிலையில் விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறைந்தபட்ச ஆதார விலையை தொடரும் என்று மத்திய அரசு உறுதி அளித்தாலும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் விடாப்பிடியாக இருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ,சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர், விளையாட்டு, பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்று முழு அடைப்புக்கு விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மக்கள் நீதி மையம், காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்தி அமைதியை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்து வருகின்றது.
இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் 7000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இந்த போராட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின்போது தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என்று பாரதிய கிசான் அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் டெல்லிக்கு ஏற்றிச் செல்லப்படும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிகிறது.