நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட சயான் என்பவர் சென்ற காரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சயான் காயங்களுடன் உயிர்த்த தப்பிய நிலையில், அவருடைய மனைவி மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையில் கண்காணிப்பு கேமராக்களை கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்து வந்த தினேஷ்குமார் என்பவரும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி தொடர் மரணங்கள் நிகழ்ந்த போது அதிமுக ஆட்சியில் இருந்ததால் போலீசார் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்ததால் மீண்டும் கொடநாடு வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
சமீபத்தில் கொடநாடு வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு தொடர்பான 1500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான ஒரு குழு கொடநாடு பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் கொலை நடந்த சமயத்தில் ஓம் பகதூருடன் கிருஷ்ணதாபா என்பவரும் காவல் பணியில் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர் தற்போது நேபாளம் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இதனால் நேபாளம் நாட்டிற்கு சென்று கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்துவதற்கு தற்போது சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இவரிடம் விசாரணை நடத்துவதன் மூலம் கொடநாடு வழக்கில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது