கொடிவேரி அணையில் தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செந்தில்குமார் மகன் ரகு(21) வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரகு தனது பெண் தோழிகள் 2 பேருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி அணைக்கு குளிப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் அது அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி கொடிவேரி பாலத்தின் கீழ் பகுதியில் குளிப்பதற்காக ரகு ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது ரகு தண்ணீரில் நின்றபடி செல்பி எடுத்த நிலையில் அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதன் காரணமாக ரகு தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டதை பார்த்து அவருடன் வந்த 2 பெண் தோழிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதன்பின் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரகுவின் சடலத்தை ஆற்றில் இருந்து மீட்டனர். இதனைத்தொடர்ந்து ரகுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொடிவேரி அணையில் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் செல்பி எடுக்க முயற்சி செய்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.