மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, பிரச்சாரம், களம், போராட்டம், சிறை இந்த சொற்களை கூட்டிப் பார்த்தால் வார்த்தை கிடைக்காது வைகோ தான் கிடைப்பார் என்று ஐயா வீரமணி அவர்களின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எங்கள் இயக்க தலைவர் மாமனிதன் வைகோ அவர்களே.. இந்தி ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது நமது மோடி அவர்கள் தலைமையிலான பாஜக அரசு. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே வரி என்று சொன்னவர்கள், இன்று ஒரே மொழி ஹிந்தி மொழி என்று கொக்கரிக்கின்றனர்.
மாநிலங்களின் வளர்ச்சி இந்த நாட்டின் வளர்ச்சி, இந்த நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள், இவை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, மத அரசியல் செய்து கொண்டிருந்த இந்த சனாதன சக்திகள், இன்று மொழி அரசியலை கையில் எடுத்திருக்கின்றார்கள். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் தத்துவத்தை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையே அல்லது மக்கள் வளர்ச்சி பணிகளையே முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
அதற்கு காரணம், அதற்கு இடையூறாக இருப்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர். இந்த ஆளுநரை வைத்துக்கொண்டு, ஒன்றிய அரசு இரட்டை ஆட்சியை செய்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்து, மாநில அரசுகளின் வரி உரிமை பறித்துக் கொண்டது. இப்போது 2020 புதிய கல்விக் கொள்கை என்பதை வைத்துக்கொண்டு, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை செய்ய முன் வந்துள்ளது இந்த ஒன்றிய அரசு. இது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல, இந்திய வரலாற்றில் கிட்டத்தட்ட 84 வருடங்களாக தமிழர்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள் .