ஆசிரியரிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் அருகாமையிலிருக்கும் பாபநாசத்தில் வினோதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோதா தனது கணவர் ரவிசங்கருடன் கோவிலுக்கு சென்று விட்டு அவரின் தாய் வீட்டிற்கு செல்வதற்காக மணல்மேடு அருகாமையில் இருக்கும் முட்டம் பாலத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் வழி கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் வழி கூறுவது போல் பேசிக்கொண்டே வினோதாவின் கார் அருகில் சென்று அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் காரை எடுத்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் அவர்கள் 2 பேரிடமும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வினோதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் இன்பரசன் மற்றும் ரகுபதி ஆகிய 2 பேரும் வினோதாவிடம் சங்கிலி பறிக்க முயற்சி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து ஏற்கனவே வழக்கு பதிந்திருந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து இந்த காரை பறிமுதல் செய்துள்ளனர்.