பிரேசிலில் 8 மாத கர்ப்பிணியை இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பிரேசிலில் Pamella Ferreira Andrade Martins என்ற 8 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது குளியலறையில் அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் வயிற்றிலிருந்த குழந்தை காணாமல் போனது. இதனால் காவல்துறையினர் அப்பகுதியில் குழந்தையை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு 22 வயது இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். அந்த குழந்தை இறந்திருந்தால் இது குறித்த பெண்ணிடம் கேட்டபோது, ” வீட்டில் நானே குழந்தை பெற்றுக் கொண்டேன். படியில் இறங்கும் போது கைத் தவறி கீழே விழுந்ததில் குழந்தை உயிரிழந்தது” என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்தனர்.
பரிசோதனையின் முடிவில் அந்த பெண் கர்ப்பம் அடையவில்லை என்று தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு மருத்துவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை நடப்பதற்கு முந்தைய நாள் இரவு Pamella -வுடன் இந்த 22 வயது பெண் தான் இருந்தார் என்று தெரியவந்தது. 8 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையை எடுத்துக் கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் குழந்தை எவ்வாறு இறந்தது என்பதை அறிவதற்காக குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.