தலைமறைவாகி உள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் டெல்லி நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்துள்ளது
ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமாருக்கும், மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா , இருவருக்கும் இடையே டெல்லியில் சத்ராசல் அரங்கில், மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சாகர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் சுஷில் குமார் மற்றும் மோதலில் ஈடுபட்ட நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சுஷில் குமார் தலைமறைவாக உள்ளார். இதனால் சாகர் உயிரிழந்த வழக்கை, தற்போது கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சுஷில் குமார் ஹரிதுவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மாறிக்கொண்டே வருகிறார் . எனவே அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் இவரைப் பற்றி தகவல்கள் அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள், ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் டெல்லி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதோடு அவரை பிடிப்பதற்கான பரிசு தொகையும் அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.