இலங்கை அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதோடு இந்த தொடரில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் ஸ்ரேயஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினார்.இதனிடையே நேற்று நடந்த போட்டியில் இவருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இருதரப்பு டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன், அவர் பகிர்ந்து கொண்டார்.அதோடு 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் அய்யர் 204 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.இதற்கு முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் விராட் கோலி 199 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.