சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் , செல்போன் மற்றும் மடிக்கணினிகளை திருடியவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜதுரை என்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவர் செல்போனில் யார் யாருடன் பேசினார் என்பதை அறிந்து திருச்சியில் வைத்து ராஜதுரையை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜதுரை 2011ஆம் ஆண்டிலிருந்து மடிக்கணினி செல்போன்களை திருடி வருவதாகவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் கட்டுமான பணிகளில் வேலைக்கு சேர்ந்த போது தூங்கிக் கொண்டிருக்கும் கட்டுமான தொழிலாளர்களின் செல்போன்களை திருடி தனது திருட்டு தொழிலை ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக சென்னையில் மாமல்லபுரம், கிண்டி, பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் அறை எடுத்து தனியாக தங்கி இருக்கும் கல்லூரி மாணவர்கள் வேலை செய்யும் ஐடி ஊழியர்களை நோட்டமிட்டு அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் மடிக்கணினியை திருடியுள்ளார். மேலும் திருச்சியில் உள்ள புவனேஸ்வர் என்பவர் மூலம் செல்போன் மற்றும் மடிக்கணினியின் பாகங்களை பிரித்து விற்பனை செய்துள்ளார்.
9 வருடங்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாலும் இடையில் திருட்டு தொழிலை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பண கஷ்டம் காரணமாக மீண்டும் திருட தொடங்கியிருக்கிறார்.ராஜதுரையிடமிருந்து 11 மடிக்கணினிகள் மற்றும் 9 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.