களக்காடு மலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் அணைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் களக்காடு வனச்சரகம் கருங்கல் கசம் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்து பரவியது. இதுகுறித்து தகவலறிந்த புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின்படி, வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு வனச்சரகர் பாலாஜி தலைமையில், வனவர் ராம்பிரகாஷ் முன்னிலையில் களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என 50 பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று நேற்று 2-வது நாளாக அம்பை, பாபநாசம், கடையம் வனசரகங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண், கற்களை அள்ளி போட்டு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியினை புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, இந்த தீ விபத்தால் 2 ஏக்கர் பரப்பளவுக்கு குறைவான பகுதியில் வளர்ந்திருந்த சுக்குநாறி புற்கள் மட்டுமே கருகி இருப்பதாகவும் வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.