Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம்…. தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்த போது தந்தையின் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியில் அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் வசித்து வரும் பாலன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய விஜயனும் அவரது தந்தை அசோகனும் சென்றுள்ளார்கள்.

அங்கு அசோகன் தனது மகன் விஜயனை இரும்பு ஏணியில் ஏறி கட்டடத்தின் மேலே வயரிங் வேலை செய்ய சொல்லி இருக்கிறார். அப்போது விஜயன் காலில் காலணி அணியாமல் இரும்பு ஏணியில் ஏறி அங்கிருந்த கட்டடத்தில் வயரிங் வேலையை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரும்பு ஏணி கீழே சாயாமல் இருக்க அசோகன் ஏணியை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஏணியின் கீழ் இருந்த வயர் மூலம் மின்சாரம் பாய்ந்ததால் ஏணியின் மேல் நின்ற விஜயன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அசோகனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

அதன்பிறகு விஜயனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு விஜயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜயனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு மின்சாரம் பாய்ந்து தந்தையின் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |