கூலி தொழிலாளியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு தனது வீட்டின் வெளியே மது குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வேலுவை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் வேலு அலறி சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வேலு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்மஞ்சேரி காவல்துறையினர் வேலுவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலுவின் மருமகனான சுரேஷ் என்பவர் கடந்த மாதம் ஒருவரை கொலை செய்துள்ளார். அதனால் கொலை செய்யப்பட்டவரின் தரப்பினர் சுரேஷை கொலை செய்வதற்காக திட்டமிட்டு செம்மஞ்சேரி பகுதிக்கு வந்துள்ளனர். ஆனால் சுரேஷ் இல்லாத காரணத்தால் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த சுரேஷின் மாமனாரான வேலுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்த சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது 4 பேர் இந்த கொலையில் சம்பந்தபட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் செம்மஞ்சேரி காவல்துறையினர் வேலுவை வெட்டிச் சென்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.