குடியாத்தம் அருகில் கிராம பகுதிக்குள் நுழைய முயன்ற யானைகள் கூட்டத்தை கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் விரட்டி அடித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் விவசாய நிலத்திற்குள் யானைகள் நுழைந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதனால் கிராம மக்களின் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில் 15 யானைகள் கூட்டம் கடந்த சில தினங்களாக பரதராமி கன்னிகாபுரம் பகுதியில் நுழைவதற்கு முயன்றுள்ளது. அப்போது யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர் பூபதி, நீலகண்டன் மற்றும் வனத்துறையினர் பரதராமி கன்னிகாபுரம் பகுதிக்கு சென்று கிராம மக்களின் உதவியுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் நுழைய முயன்ற யானைகளை வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் ஆந்திர மாநில யாதமரி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.