திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து விழா ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு வரும் 21ஆம் தேதி திருவிழாவுக்கான கொடியேற்ற படுவதாக இருந்தது.
திருவிழாவில் பங்கேற்கும் திருநங்கைகள் கூத்தாண்டவரை மனதில் நினைத்து ஒரு நாள் இரவு தாலி கட்டிக் கொள்வார்கள். அடுத்தநாள் தேரோட்டத்தின்போது விழாவின் நிறைவாக தாலி கயிறு அறுத்து, திருநங்கைகள் ஒப்பாரி வைப்பார்கள். திருவிழாவையொட்டி திருநங்கைகளுக்கு இடையே நடைபெறும் அழகிப் போட்டிகளில் பலர் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகள் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.