வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்ததுள்ளது. மேலும் சதீஷ் பிரபல ரவுடி என்பதும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சில நாட்களாக முன்பாக சதீஷிற்கும் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சில நபர்களுக்கும் கஞ்சா விற்பதில் ஒரு தகராறு நடந்தது தெரியவந்துள்ளது.
எனவே முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சதீஷை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசி இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.