கர்நாடகா மாநில ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடைபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போலீசார் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது வரைக்கும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குகளை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.