ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். இதனையடுத்து நிர்வாகிகள் பிரதீப், கோவிந்தன், சிபிசேகரன், மணி, முத்தமிழ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
மேலும் ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் மணி, மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், துணை செயலாளர் சுதர்சனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து பேசினார்கள்.
அதன்பின் “கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.