துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் 90-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டிற்கான சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர்களிடம் பலமுறை புகார்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். அப்போது ஆணையாளர் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
ஆனால் இதுவரை ஊதிய உயர்வு போன்ற எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாததால் ஏமாற்றமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் கலெக்டர் வந்தபின் அவரிடம் மனு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கலெக்டர் வரும்வரை இந்த இடத்தில் இருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன், ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அப்போது உங்களது உரிய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனுவாக எழுதி கொடுங்கள் ஆணையாளரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 5 பேர் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாருங்கள் என்றும் மற்றவர்கள் கலைத்து செல்லுமாறு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு முடிவு வரும் வரை நாங்கள் இந்த இடத்திலிருந்து போக மாட்டோம் எனக் கூறி கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.