வேலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 734 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் சளி மாதிரி சேகரித்தல் மற்றும் 45 வயதிற்கு மேல் இருப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒரே நாளில் 734 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வேலூர் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். மேலும் மீதம் இருக்கும் 50 பேர் வேலூருக்கு சிகிச்சைக்காக வந்த பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 734 பேர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரையிலும் 31 ஆயிரத்து 809 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றை விரட்டி அடிக்க பொதுமக்கள் முழு ஊரங்கை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.