கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயத்தை போக்கும் வகையில் மருத்துவர் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சை மையத்தில் நாற்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 700 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 600 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயாளிகள் இடையில் பயம் ஏற்பட்டுள்ளது. அந்த பயத்தை போக்குவதற்காக சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவர் விக்ரம் குமார் நோயாளிகளுக்கு நடனமாடி பயத்தை போக்கியுள்ளார்.
எனவே தினந்தோறும் மருத்துவர் விக்ரம் குமார் மற்றும் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளிகள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இரவு நேரத்தில் பாடல், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் செய்து மற்றவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமார் கூறியபோது புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் மிகுந்த பயம் மற்றும் மன அழுத்தத்துடன் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி பயம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பாதுகாப்பு உடைகளை அணிந்து நடனம் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதாக விக்ரம் கூறியுள்ளார்.