அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மக்கள் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் பெரும்பான்மையான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா முகாம் மற்றும் மருத்துவமனை வளாகத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளித்துவரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். அந்த ஆய்வின்போது நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன், கல்லூரி டீன் செல்வி, கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுடன் இருந்தனர்.