திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. ஆனால் கடந்த 2-ஆம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. இதனையடுத்து சிவராஜ் பேட்டையில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் மற்றும் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ தொடங்கி வைத்து ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ். ராஜேந்திரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர். இந்த முகாமில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியபோது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மண்டபங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே வருகின்ற 17ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தமிழக அரசு தடுப்பூசிகளை வழங்கும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.